Wednesday, March 24, 2010

பினாங்கு மாநில அரசாங்கம் பினாங்கில் உள்ள இந்தியர்களுக்கு எதுவுமே செய்ய வில்லை என்று கெடா மாநிலத்தில் சென்று கதையலந்திருக்கும் பினாங்கு மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் பி.கே.சுப்பையாவின் கூற்று நகைப்புக்குரியது.
பினாங்கில் இருந்து வண்டி பிடித்து கெடா மாநிலத்திற்கு சென்று பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது சேற்றை அள்ளி வீசியிருக்கிறார் பினாங்கு மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டத்தோ சுப்பையா. இவரின் பருப்பு பினாங்கு மாநிலத்தில் வேகாததால், கெடாவில் சென்று கதை அளந்திருக்கிறார்.
டத்தோ சுப்பையாவின் கூற்றை காண்கையில் இவர் இன்னும் பினாங்கு மாநிலத்தில்தான் இருக்கின்றாரா அல்லது துறவு சென்று விட்டு இப்பொழுதுதான் பினாங்கு மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளாரா என்று கேட்க தோணுகின்றது. எதற்கெடுத்தாலும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது சேற்றை வாரி வீசும் வேலையை பினாங்கு மாநில தேசிய முன்னணி கட்சிகள் கண்ணும் கருத்துமாய் செய்து வரும் வேளையில், பினாங்கு மாநில மஇகா அந்த வேளையில் மிக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது என்பதைத்தான் சுப்பையாவின் கூற்று காட்டுகின்றது. ஆட்சி பொறுப்பை ஏற்ற கடந்த இரண்டு வருடங்களில் எந்த இனத்தையும் புறக்கணிக்காமல், பினாங்கு மாநில மக்களின் மன ஓட்டத்திற்கேற்ப பல அறிய திட்டங்களை மாநில முதல்வர் லிம் குவான் எங்க, துணை முதல்வர்கள் பேராசிரியர் இராமசாமி, மனசோர் ஒத்மான், மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றமை பினாங்கு மாநில மக்கள் அறிவார்கள். பினாங்கு மாநில அரசின் மக்கள் நல திட்டங்களையும் குறை கூறி அவற்றை எவ்வேரானும் கெடுத்து விட வேண்டும் என்று குறியாய் இருப்பவர்களின் புலம்பல்கள்தான் இவ்வாறான கூற்றுகள் என்பதை இங்கே நினைவு கூற வேண்டும்.
பினாங்கு மாநிலத்தில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இந்தியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது சுப்பையாவின் மிகப்பெரிய பொய். கடந்த ஆட்சியின் பொது பல்வேறான அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட பினாங்கு மாநில இந்தியர்கள் இன்று தலை நிமிர்ந்து நடக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசேயன்றி, இந்தியர்களின் குரல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மஇகாவோ அதன் மாநில தலைவரான சுப்பையாவோ அல்ல. பினாங்கு தீவில் அமைந்துள்ள அசாத் தமிழ்ப்பள்ளிக்கு நாங்கள் நிலம் வழங்கிவிட்டோம், அதை செய்தோம், இதை செய்தோம் என்று தொடர்ந்து பொய்களை மட்டுமே முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் கூறி வந்தது. ஆனால், அந்த நிலத்தை சட்டப்பூர்வமாக அசாத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கியது மக்கள் கூட்டணி அரசாங்கம்தான். அதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர் இன்றைய துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியேயன்றி, இந்த சுப்பையா இல்லை.
பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள். :-
  1. மலேசிய சரித்திரத்தில் முதன்முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் (Budget) ஒதுக்கீடு வழங்கியது பினாங்கு மாநில அரசுதான் என்பது சுப்பையாவிற்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி? கடந்த ௨௦௦௯ ஆம் ஆண்டு ௧.௫ மில்லியன் ரிங்கிட்டை பினாங்கிலுள்ள ௨௮ தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கியது. அதே போல அந்த ஒதுக்கீடு ௨0௧0 ஆம் ஆண்டு, ௧.௭௫ மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியெல்லாம் பத்திரிகைகளில் வருகின்றது, இதையெல்லாம் டத்தோ சுப்பையா படிப்பதே கிடையாதா?
  2. மலேசியாவில் முதன்முறையாக சாலை பெயர்பலகைகளில் தமிழுக்கும் இடம் தந்ததும் பினாங்கு மாநில அரசுதான். பினாங்கு நகரில் சுற்றி பார்த்தாலே அது தெரியும். daththo சுப்பையா பினாங்கு நகருக்குள் சென்று ரொம்ப நாட்கள் ஆகின்றதோ?
  3. பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ், தமிழர் சார்ந்த, உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யும் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒதுக்கீடு வழங்கி வருவதும் பினாங்கு மாநில அரசுதான். நம்மை அணுகும் பல்வேறு இயக்கங்களும் இது போன்ற ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் எட்டாக்கனியே என்பதை கூறுவது டத்தோ சுப்பையாவிற்கோ எதோ தெரியாதுதான்.
  4. பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் அங்காடி கடைகள் மற்றும் உரிமங்கள் ௩௦௦க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ளன. டத்தோ சுப்பையா ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த எண்ணிக்கை ௩௩௦க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் உறுப்பினராக இருந்த டத்தோ சுப்பையா அவர் காலத்தில் எத்தனை இந்தியர்களுக்கு அங்காடி கடைகள், உரிமங்கள் வழங்கப்பட்டது என்பதை குறிப்பிடுவாரா?
  5. பினாங்கில் உள்ள ஆலயங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் நடத்தப்பட்டன என்பது டத்தோ சுப்பையாவிற்கு தெரியாதா? கடந்த ஆட்சியில் இவரின் சொந்த தொகுதியான பாகான் டாலாம் சிவன் ஆலயம் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டதே, அப்பொழுது இந்த சுப்பையா என்ன செய்தார்? இன்று அந்த ஆலயத்திற்கான நிலத்தை வழங்கும் அடிப்படை வேளைகளில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசுதான் முன்னெடுத்தது. இதே போல், எத்தனை ஆலயங்களை கழிவு நீர் குட்டைகளுக்கு அருகில் இடம்பெயர வைத்திருப்பார்கள்? அப்பொழுதெல்லாம் டத்தோ சுப்பையா என்ன செய்துக் கொண்டிருந்தார்? இன்று இந்து ஆலயங்களை அவ்வாறு நடத்துவதற்கு எவனுக்காவது தைரியம் உண்டா? இல்லை; ஏன் தெரியுமா? பினாங்கு மக்கள் கூட்டணி அரசில், இந்தியர்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் உங்களை போன்ற தலையாட்டி பொம்மைகள் அல்ல.
  6. இன்று வரையிலும், பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கும் திட்டங்களையும் முனைப்புடன் செயல்பட்டு வருவது மக்கள் கூட்டணி அரசுதான். தனியாரிடம் உள்ள நிலத்தை கையகப்படுத்தி தமிழ் பள்ளிகளுக்கு வழங்கவும் மாநில அரசு தயாராக உள்ளது. இது போல தேசிய முன்னணி அரசு எத்தனை தமிழ் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கியது? டத்தோ சுப்பையா அறிக்கை தருவாரா?
  7. பினாங்கு மாநில அரசாங்க துறைகளிலும், மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களிலும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு எவ்வாறு பெருகியுள்ளது என்பதை நீங்களே நேராக சென்று காணலாம். எத்தனை இந்தியர்கள் பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதை டத்தோ சுப்பையா கொஞ்சம் கணக்கெடுத்து விட்டு பிறகு பேசினால் நன்றாக இருக்கும்.
  8. பினாங்கு மாநிலத்தில் வாக்களிக்கும் ௬0 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இன வேறுபாடு பார்க்காமல் ஒவ்வொரு வருடமும் ௧00 ரிங்கிட் வழங்குகின்றது பினாங்கு மாநில அரசுஇதில் பல இந்தியர்களின் பெயரும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டத்தோ சுப்பையா இந்த திட்டத்திற்கு தனது பெயரையும் பதிந்து கொண்டு பிறகு, நாங்கள் செய்கின்றோமா இல்லையா என்பதை கூறலாம்.

இப்படி மக்கள் கூட்டணி பினாங்கு மாநில அரசு நடவடிக்கைகளின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் முதலில் டத்தோ சுப்பையா பதில் கூறட்டும், பிறகு எங்களின் சாதனைகளை நாங்கள் பட்டியலிடுகிறோம். பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு இந்தியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பச்சையாக பொய் பேசியிருக்கும் டத்தோ சுப்பையாவிற்கு நாங்கள் ஒன்று கூற விரும்புகிறோம். நாங்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எங்களின் வழியில் போய் கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு மட்டுமே சேவை செய்து வரும் நாங்கள், நித்தியானந்தா போன்ற சாமியார்களை அழைத்து வந்து மக்களுக்கு பிரசங்கம் செய்யவில்லை; அவ்வாறு பினாங்கு மாநிலத்தில் பெரிய, பெரிய பிரசங்கமெல்லாம் நடத்தியது யாரென்பதை மக்கள் அறிவர்.

பினாங்கு பொதுமக்களிடத்தில் தனது பேச்சு எடுபடாது என்பதால்தான், தனது கட்சிக்காரர்களிடம் டத்தோ சுப்பையா ஏதேதோ உளறி வருகிறார். அவர்களும், அதை ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். முடிந்தால் டத்தோ சுப்பையா தனது வழக்கறிஞ்சர் தொழில் முனைப்பு காட்ட வேண்டும்; இல்லையென்றால் தனது ஒய்வு காலத்தை முறையாக கழிக்க வேண்டும், அதை விடுத்து ஊர் ஊராக சென்று நித்தியனாந்தாவை போல பொய் பிரசாரமும், பிரசங்கமும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment