Wednesday, July 28, 2010

ஆணவம் பிடித்த அசின் என்ற நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது.
மலேசிய தமிழ் திரைப்பட வினியோகப்பாளர்களுக்கு பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் வேண்டுகோள்


இலங்கையின் வடக்கிழக்கில், ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை உலக வல்லரசுகளின் உதவியோடு ஆயுத பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் இராஜபக்சேவின் குடுமபத்தினரோடு கூடி, களித்து கும்மாளமடித்து திரியும் அசின் என்ற திமீர் பிடித்த நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது என்று மலேசிய தமிழ் திரைப்பட வினியோகப்பாளர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கை என்றாலே, சிங்கள பேரினவாதமும், சிங்கள இனவெறித்தனமும்தான் நமது நினைவுக்கு வரும். கடந்த பல்வேறு காலங்களிலும், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை, தங்களின் இனவெறி தாக்குதல்களுக்கு உட்படுத்தி இன அழிப்பு நாடகத்தை நடத்தி வந்தது. இலங்கை பேரினவாதத்தை தட்டிக்கேட்க ஈழத்தில் பல அமைப்புகள் பிறந்த பொழுதிலும், மாவீரன் தலைவர் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கிய பிறகே அந்த இனவெறி ஆட்டங்கள் சற்று தனிந்தன. இவ்வேளையில், ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு என்று போராடிய அந்த விடுதலை அமைப்பை அழித்துவிட வேண்டும் என்று, இந்திய உள்ளிட்ட பலம்பொருந்திய உலக வல்லரசுகளின் ஒத்துழைப்போடு, கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையின் கிழக்கில், முள்ளிவாய்க்கால் என்ற பகுதியில் ஒரு இன அழிப்பு நாடகத்தை நடத்தி முடித்தது இலங்கையின் இனவெறி அரசு. விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில், ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தையே அழிக்கப்பார்த்தான் ராஜபக்சே என்ற கொடுங்கோலன்.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த இலங்கை இனவெறி அரசு, அத்தோடு தனது இன அழிப்பு படலத்தை நிறுத்திவிடாமல், ஈழத்தமிழர்களை தமது சொந்த மண்ணிலேயே அகதிகாளாக ஆக்கி விட்டுள்ளது. முள்வேலி முகாம்களுக்குள் ஈழத்தமிழர்கள் படும் கொடுமையை வார்த்தையில் விவரிக்க முடியாது என அண்மையில் கூட இலங்கைக்கு சென்று வந்த சிலாங்கூரை சேர்ந்த தமிழன் உதவும் கரங்கள் அமைப்பின் தோழர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல், இலங்கை இராணுவம் கடும் போர்க்குற்றங்களை புரிந்திருப்பதாக கூறி உலக நாடுகளின் அழுத்தத்திற்கு பிறகு, ஐக்கிய நாடுகள் சபையே இலங்கையின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க, தனது போர்க்குறங்களையும், இன அழிப்பு படலத்தையும் மூடி மறைக்க இலங்கை அரசு கடுமையாக முயன்று வருகின்றது. அதன் காரணமாகவே, இலங்கையில் அனைத்துலக திரைப்பட விருதளிப்பு நிகழ்வை நடத்தியது. பெரும் நடிகர் பட்டாளமே திரளும் என்று காத்திருந்த இலங்கை அரசுக்கு கிடைத்தது பெரும் ஏமாற்றம்தான். இந்தி திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மறுமகள் ஐஸ்வர்யா ராய் என புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகர்கள், அண்ணன் சீமானின் நாம் தமிழர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்த விழாவை புறக்கணித்தனர். தென்னகத்து நடிகர்களான ரஜினிகாந்த, கமலஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி என அனைவருமே இலங்கை இனவெறி அரசின் அழைப்பை புறக்கணித்தனர். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களைக் கண்டே அவர்கள் அவ்வாறு முடிவெடுத்தனர் என கூறலாம்.

நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கைக்கு படபிடிப்புக்கு செல்கிறேன் என்று கூறிக்கொண்டு, இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு சேர்ந்து தமிழர்கள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் அசின், இலங்கை அரசின் பிரச்சார கருவியாக செயல்படுகிறார். இலங்கையில் இன அழிப்பு நடக்கவேயில்லை என்று பிரச்சாரம் செய்யும் நோக்கத்திலேயெ, இலங்கை இனவெறி அரசு தற்பொழுது நடிகர், நடிகையரை தம் வசம் இழுக்கும் செயலில் இறங்கியுள்ளது. இலங்கை இனவெறி அரசின் வஞ்சகத்தனத்தை உணர்ந்துதான், இந்தியாவின் தலைசிறந்த நடிகர்கள், தமிழகத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அமிதாப் பச்சன் உட்பட இலங்கை அரசின் அழைப்பை புறக்கணித்திருக்கிறார்கள். இவ்வேளையில், இலங்கை அரசின் பிரச்சார பொம்மையாக செயல்பட்டது மட்டுமின்றி, அவரின் முட்டாள்தனமான செயலுக்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்றும், ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமீராக பேசும் அசின் என்ற ஆணவக்காரியின் திரைப்படங்களை மலேசியாவில் திரையிட வேண்டாம் என்று, மலேசியாவில் உள்ள தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்களிடமும், திரையரங்கு உரிமையாளர்களிடமும் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இதன் தொடர்பாக, மலேசியாவில் தமிழ் திரைப்படத்தை வினியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களான லோட்டஸ் பைஃப் ஸ்டார் மற்றும் பிரமிட் சய்மீரா ஆகிய நிறுவனங்களுக்கு எமது கோரிக்கை மனுவை விரைவில் அனுப்புவோம். லோட்டஸ் பைஃப் ஸ்டார் மலேசியாவின் தலைசிறந்த திரைப்பட வினியோகஸ்தர்கள். வள்ளல் ரெனாவின் புதல்வர்கள் இந்நிறுவனத்தை நிர்வகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வள்ளல் ரெனாவின் வழிவந்த அவர்தம் புதல்வர்கள், தமது தந்தையைப் போலவே, மலேசியத்தமிழர்களின் உணர்வுகளுக்கும், உலகத் தமிழர்களின் மனவோட்டத்துக்கும் கண்டிப்பாக மதிப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதைப்போலவே, பிரமிட் சய்மீரா நிறுவனத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் வேள்பாரி சாமிவேலு அவர்களும், இந்த விவகாரத்தில் அரசியல் எல்லைகளைத் தாண்டி, தமிழர்களின் மனவோட்டத்தை மதிப்பளிக்க வேண்டும் என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் நம்புகின்றது. நன்றி.

“தமிழ் வாழும் வரை, தமிழன் வாழ்வான்”
“தமிழன் வாழ்ந்தால்தான், தமிழே வாழும்”

இங்கனம்,

________________________
சத்தீஸ் முனியாண்டி,
அமைப்புத் தலைவர்,
பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம்

No comments:

Post a Comment